கால்பந்து பிரான்ஸ் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல்; 27 ரசிகர்கள் காயம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்  கால்பந்து போட்டிகள் கடந்த மாதம் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. லீக் மற்றும் நாக்வுட் மற்றும் காலிறுதி போட்டிகள் நிறைவு பெற்று அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. பிரான்ஸ் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் போட்டி முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இருந்த கால்பந்து ரசிகர்கள் பட்டாசுகளை வெடிக்க செய்துள்ளனர்.

இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சிதறி ஓடியுள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிய வந்து உள்ளது.

இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் குரேசியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கும் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி மோதும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி 3-வது இடத்துக்கான பிளே அப் சுற்றில் பெல்ஜியம் அணியுண்ட வரும் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த உலக கோப்பை போட்டிகள் வரும் 2022ம் ஆண்டு நவம்பர் 21 முதல் டிசம்பர் 18ம் தேதி வரை கத்தாரில் நடக்க உள்ளது.