இன்று போராட்டம்: விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு

தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டப்பணியை முழுமையாக வழங்க வலியுறுத்தி, இன்று போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க காரைக்கால் மாவட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற கூலித் தொழிலாளர்கள் வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும் செல்லும் அவலம் தொடர்கிறது. இதனால் கிராம மக்களிடையே வறுமை தாண்டவமாடுகிறது. இதனை போக்கக்கூடிய 100 நாள் வேலை உறுதித் திட்டப்பணி காரைக்கால் மாவட்டத்தில் முழுமையாக நடைபெறவில்லை. சில நாள்கள் மட்டுமே நடைபெற்று பின்னர் நிறுத்தப்பட்டுவிடுகிறது. நாள் கூலி ரூ.224 தரவேண்டும் என்பதையும் இதுவரை தொழிலாளர்களுக்குத் தரவில்லை.

100 நாள் வேலையை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் முழுமையாக தரவேண்டும். பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வார இறுதியில் ஊதியம் தருவதை உறுதி செய்யவேண்டும்.

வேலையில்லா காலங்களில் அரசு நிவாரணம் தரும் முடிவை எடுத்து செயல்படுத்தவேண்டும். இதன் மீது கவனம் செலுத்தாத புதுச்சேரி அரசைக் கண்டித்து இன்று காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக விவசாயத் தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.