மோடிக்கு கின்னஸ் விருது வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம்

அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு கின்னஸ் சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தொடர்ந்து பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மக்களின் வரிப்பணத்தை பெருமைக்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும் மோடி செலவு செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கின்னஸ் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ள அவர், உள்நாட்டுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் மோடி உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 41 முறை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 355 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.