கண்காட்சி குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி, கண்காட்சியின் தலைவர் ஆர்.செளந்தரராஜன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
18-ஆவது முறையாக நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை, விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், வேளாண் இயந்திர உற்பத்தியாளர் சங்கம், நபார்டு உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.
இந்த ஆண்டு கண்காட்சி, விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இதில், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, ஸ்வீடன், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், மத்தியபிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களும் கலந்து கொள்கின்றன.
சுமார் 2.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 450 நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைக்கின்றன. கண்காட்சியில், சூரிய ஒளி பம்புகள், நுண் நீர்ப் பாசனம், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், மண்ணில்லா விவசாயம், தானியங்கி முறைகள், மதிப்புக் கூட்டுப் பொருள்கள், அறுவடை பின் தொழில்நுட்பம், வேளாண் சந்தை, கால்நடை வளர்ப்பு, மீன், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட உள்ளது.
மேலும் கண்காட்சி அரங்கில் வரும் 14-ஆம் தேதி பால்வளத் துறை குறித்த கருத்தரங்கும், 16-ஆம் தேதி பயோ நியூட்ரிசன் பார்மிங் கருத்தரங்கும் நடைபெறுகிறது. மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வேலிகள், எடைக் கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. இந்தக் கண்காட்சியில் சுமார் 1.50 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், நாடு முழுவதிலும் இருந்து வேளாண் நிபுணர்கள், உணவு பதப்படுத்தும் தொழில் துறையினர், இடுபொருள், விதை உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், வங்கியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.