மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் மொழி மாற்றம் செய்து கேட்கப்பட்ட கேள்விகளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு விட்ட நிலையில் சில மாநிலங்கள் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டன. சில மாநிலங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழில் நீட் தேர்வு எழுதிய சுமார் 24,700 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பது சி.பி.எஸ்.இ. அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சட்ட நிபுணர்களுடனும் கலந்து ஆலோசித்தனர். அப்போது சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுகுவது என்று விவாதித்து முடிவுகள் எடுத்துள்ளனர்.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்ய சி.பி.எஸ்.இ. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது சி.பி.எஸ்.இ. அதிகாரிகள், மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். அந்த அமைச்சகம் அனுமதி அளித்ததும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அப்பீல் மனுவை தாக்கல் செய்யும்.

இதற்கிடையே மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தி வரும் சுகாதாரத்துறையிடம் மனிதவள அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அப்பீல் செய்யப்படும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இன்று சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று தெரிகிறது.

சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தனது அப்பீல் மனுவில் 2018-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு குறிப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்ட திட்டமிட்டுள்ளது. அந்த தகவல் தொகுப்பில், ‘‘மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 மொழிகளில் வினா புத்தகம் வழங்கப்படும். ஒன்று மாநில மொழியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும்.

மாநில மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு, கேள்வி மொழி மாற்றத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆங்கிலத்தில் உள்ளதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் இறுதியானதாக கருதப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறிப்பை சுட்டிக்காட்டி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுக்கு தடை கேட்க சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு போட்டு தீர்ப்பைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரும், மேல்சபை எம்.பி.யுமான டி.கே.ரெங்கராஜன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டால் உடனடியாக தீர்ப்பை வெளியிட இயலாது என்று கூறப்படுகிறது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட முடியும். அந்த தீர்ப்பு வருவதற்குள் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவ கவுன்சிலிங் முடிந்து விடும்.

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவிகிதம் போக மீதமுள்ள இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 3501 எம்.பி.பி.எஸ். இடங்கள் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இது தவிர அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 இடங்களும் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 600-ம் நிரம்பி விட்டன.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 723 எம்.பி.பி.எஸ். இடங்களும், 645 பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. மருத்துவ படிப்பை பொறுத்த வரையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

இந்த நிலையில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டு மீண்டும் மருத்துவ கலந்தாய்வை நடத்துவது எப்படி சாத்தியமாகும் என்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வருகிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.