இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், நீச்சல், கையுந்துப் பந்து (வாலிபால்), கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் காலை 8 மணி முதல் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு 100 மீ, 400 மீ, 1,500 மீ ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி, வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், கையுந்துப் பந்து, கபடி ஆகியவை நடத்தப்படும். இருபாலருக்கும் அனைத்து வகையான நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.