சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்க வேண்டும் என்று அதிமுக., எம்.பி.க்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களுடன் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு, புதிய அமைப்பை ஏற்படுத்தும் யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து அதிமுக., எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்வது, எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா ஆகியவற்றை எதிர்க்குமாறு எம்.பி.க்களுக்கு இருவரும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த இரண்டு மசோதாக்களையும் நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். யுஜிசி மசோதாவை வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Correct