துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக திமுக எம்.பி., ஆர்எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவில், “ஒ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, வாரிசுகள் மற்றும் சகோதரர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்றும், “வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தேனியில் பல இடங்களிலும், வெளிநாடுகளிலும், ஓ.பி.எஸ்சின் வாரிசுகள் முதலீடு செய்தாகவும், அவர்கள் பல நிறுவனங்களிலும் நிறுவனர்களாக உள்ளனர் என்றும், சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் பன்னீர்செல்வம் பெயர் உள்ளதாகவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை என்ன செய்தீர்கள். 3 மாதங்களாக விசாரணை நடத்தியும் முன்னேற்றம் அடையவில்லை எனக்கேள்வி எழுப்பியதுடன், சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் உள்ளதால், வழக்கை ஏன் சிபிஐக்கு விசாரணைக்கு மாற்றக்கூடாது என்றும், வழக்கு தொடர்பாக, விவரங்கள் இருந்தால் சிபிஐயிடம் தெரிவியுங்கள் என கூறியதோடு, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.