இன்று விசாரணைக்கு வருகிறது இரட்டை இலை வழக்கு

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி தேர்தல் ஆணையம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை சின்னத்தை ஒதுக்கியது. இதையடுத்து, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுத்தொடா்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜூலை 12-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிடுகையில், ஆட்சியிலும், கட்சியிலும் எங்கள் தரப்புக்கு பெரும்பான்மை உள்ளது. சின்னங்கள் தொடா்பான வழக்குகளில் தோ்தல் ஆணையம் பெரும்பான்மையைக் கருத்தில் முடிவு எடுத்து வருகிறது.

அந்த வகையில், இரட்டை இலைச் சின்னம் வழக்கில் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு எங்கள் தரப்புக்கு சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது என்றார்.

இந்த வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு டெல்லி உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் இன்று இந்த வழக்கு விசாரணை நடக்க உள்ளது.