இந்த ஆண்டு, நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில், 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு, ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. `தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, குழப்பமான வகையில் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கும், தலா 4 மதிப்பெண் வீதம், 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் மேல்முறையீடும், அதற்கு எதிராக ரங்கராஜன் எம்.பி சார்பில் கேவியட் மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன.
அந்த மேல் முறையீட்டு மனுவில், `நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு, தமிழ் மொழி பெயர்ப்பாளர்களே காரணம். தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்தனர். 554 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 196 மதிப்பெண்களை வழங்கினால், அவரின் மொத்த மதிப்பெண் 750 ஆக உயரும். நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்ணே 720தான் என்ற நிலையில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு எப்படி கருணை மதிப்பெண்ணாக 196 தர முடியும்? இது குழப்பத்தை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் இன்று மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , `நீட் வினாத்தாளை மொழிபெயர்ப்புச் செய்ய தமிழக அரசு நியமித்தவர்களையே பயன்படுத்தினோம். வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறாக இருந்ததற்கு மத்திய அரசு பொறுப்பல்ல. மேலும், அடுத்த ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்கப்படும்’ என்றார்.