இந்தியாவில் கடந்த 4 நாட்களாக நடைபெறும் லாரி ஸ்டிரைக்கால் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க பெட்ரோல் டீசல், டிரைலர், கன்டெய்னர் லாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் டீசல், பெட்ரோல் மீதான விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வேண்டும். காலாவதியான சுங்கசாவடிகளை மூட வேண்டும். மூன்றாம் நபர் காப்பீடு தொகை உயர்வை கண்டித்தும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 4வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சார்பில் சென்னையில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்ேமளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து யுவராஜ் அளித்த பேட்டி: இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக் 4வது நாளாக நீடித்துள்ளது. இந்த ஸ்டிரைக்கால் இந்தியா முழுவதும் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்டிரைக்கால் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு தினந்தோறும் 200 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்குமாறு டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பெட்ரோல், டீசல் லாரி உரிமையாளர்கள் சங்கம், கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இன்று போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளோம். அவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றால் போராட்டம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும். துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு உடனடியாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டத்தை மேலும் தீவிரமாக்குவோம். இவ்வாறு கூறினார்.