திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சந்திரகிரகணம் நிகழ்வதை முன்னிட்டு, இன்று பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை அதிகாலை 3.50 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை, 5 மணிக்கு தங்கத்தேர் புறப்பாடு, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்று, இரவு 8 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும். இரவு 10 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, 10.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 10.50 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாற்றி நடை திருக்காப்பிடப்படும்.
நாளை வழக்கம்போல், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.