உலகில் மிக அதிகமாக தங்க கட்டிகள் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 10-வது இடத்தில் இந்தியாவும் பிடித்துள்ளது.
உலக பொருளாதாரத்தில் சமீபகாலமாக நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் பாதுகாப்பு கருதி உலகின் பல்வேறு நாடுகள் தங்கத்தை சேமிக்கத் துவங்கியுள்ளன.
பல நாடுகள் பொருளாதார நிலை கருதி வெளிநாடுகளில் சேமித்திருந்த தங்கத்தை சொந்த நாடுகளுக்கு திரும்ப பெற்றுக்கொண்டு வருகின்றன அல்லது சொந்தமாக வாங்கவும் முடிவு செய்து சமீபகாலமாக துரித நடவடிக்கை எடுத்தும் வருகின்றன.
அந்த வகையில் ஜேர்மன் மத்திய வங்கியானது பாரிஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 674 டன் தங்கத்தை கடந்த ஆண்டு திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 220 டன் தங்கத்தை துருக்கி நாடு திரும்ப பெற்றதுடன், அமெரிக்காவிடம் இருந்து சுமார் 28.7 டன் அளவுக்கு தங்கத்தை விலைக்கு வாங்கியும் உள்ளது.
ஹங்கேரி மத்திய வங்கியானது வெளியிட்டுள்ள அறிக்கையில் லண்டனில் சேமிக்கப்பட்டுள்ள 3 டன் தங்கத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உலகில் மிக அதிக தங்கம் சேமிப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவிடம் சுமார் 8,000 டன் தங்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் 3,371 டன் தங்கத்துடன் ஜேர்மனி உள்ளது. 3-வது இடத்தில் இத்தாலியும், 4-வது இடத்தில் பிரான்சும் 5-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.
உலகில் தங்கம் அதிகம் சேமித்துள்ள நாடுகள்:
- அமெரிக்கா – 8,133.5 டன்
- ஜேர்மனி – 3,371.0 டன்
- இத்தாலி – 2,451.8 டன்
- பிரான்ஸ் – 2,436.0 டன்
- ரஷ்யா – 1,909.8 டன்
- சீனா – 1,842.6 டன்
- சுவிட்சர்லாந்து – 1,040.0 டன்
- ஜப்பான் – 765.2 டன்
- நெதர்லாந்து – 612.5 டன்
- இந்தியா – 560.3 டன்