ஆபரேசன் முடிந்து இந்தியா திரும்பினார் சஹா- 3 வாரத்திற்குப் பிறகு களம் இறங்குகிறார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பராக திகழந்து வருபவர் விருத்திமான் சஹா. ஐபிஎல் தொடரின்போது இவரது கைவிரவில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியை மேற்கொண்டார்.

ஆனால் அது பயன் தராததால் சஹா அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக சஹா இங்கிலாந்து சென்று மான்செஸ்டரில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.

இன்னும் மூன்று வாரங்கள் கழித்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருதவற்கான பயிற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை குறித்து சஹா கூறுகையில் ‘‘காயத்திற்கு கட்டுப்போட்டபடி இருப்பது கடினமானது. கையை அங்கும் இங்குமாக அசைக்க இயலாது. ஒரே நிலையில் இருக்க வேண்டும். இது வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதை விட கடினமானது. இது ஒன்றுதான் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு சரியான வழி’’ என்றார்.