பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி நீர் வழிந்தோடுகிறது. இதையடுத்து அணைகள் நிரம்பி காவிரி ஆறு, பவானி ஆறு, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் கரைபுரண்டோடி வருகிறது. இதையடுத்து பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்ய ஆற்றுப் பாலத்தில் நின்றபடி வெள்ளப் பெருக்கை பார்வையிட்டார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
செங்கோட்டையன், கருப்பண்ணன், எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகளும் உடன் சென்றனர். இதைத் தொடர்ந்து அவர் குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்தார். ஈரோடு மாவட்டம்தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன என தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் 1,976 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
காவிரி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 7,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என வெள்ளபாதிப்பை ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்தார்.