திமுக பொதுக்குழு வரும் 28-ம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, கடந்த 14ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தின் போது, தணிக்கைக்குழு அறிக்கை, தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலின் போட்டி இன்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக மு.க அழகிரி அறிவித்துள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூடுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.