இலங்கை கடற்படையினர் எப்போதும் இப்படிதானா..?

 

 
 
 
 
ராமேஸ்வர மீனவர்களைப் பற்றிய செய்தி வராமல் ஒரு வாரம் செய்தித்தாள் வந்துவிட்டால் அது உலக அதிசயம்தான். இந்த இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கிக்கொண்டு தமிழக மீனவர்கள் படும்பாடு சொல்லிமுடியாது. ஏன் இப்படி மீனவர்கள் இரக்கம் இல்லாமல் வதைக்கப்படுகிறார்கள்?
 
ராமேஸ்வர மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவதும், தடிகளைக் கொண்டு அடிப்பதும், கற்களை வீசுவதும், மீன்கள் மற்றும் வலைகளை பறித்துக்கொண்டு செல்வதும் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. 
 
உண்மையில் கடலுக்குள் அப்படி என்னதான் நடக்கிறது? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மீனவர் கூட்டமை’ப்பின் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸை சந்தித்தேன்.
 
என்.ஜே.போஸ்
“மீனவர்களாகிய நாங்கள் முன்பெல்லாம் இலங்கை, இந்தியா என்ற தேச எல்லைகள் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். நாங்கள் கடலில் மீன் பிடிக்கும் போது படகில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அருகில் இருக்கும் இலங்கைக்கு சென்று சரிசெய்து கொள்வோம்.
 
கடல் சீற்றம் ஏற்படும் போது வலை காணமல் போனாலோ, மீனவர்கள் வழிதவறி சென்று விட்டாலோ இலங்கை கடற்படையினர் அவர்களை பத்திரமாக எங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். நாங்கள் இலங்கை சென்று திரும்புவதும், இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் வந்துவிட்டு போவதும் எங்களுக்குள் சகஜமாக இருந்தது. 
 
கடல் எல்லைகள் எங்களை எப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. எங்களுக்குள் நிறைய அன்னியோன்யம் இருந்தது. நாங்கள் கையோடு எடுத்துச்செல்லும் பழைய சோற்றையும் கருவாட்டுக் குழம்பையும் சாப்பிட நடுக் கடலில் காத்துக்கிடப்பார்கள் இலங்கைக் கடற்படையினர். எங்களுக்கு அவர்கள் சாப்பிட வைத்திருக்கும் பிரெட்டையும், ரொட்டிகளையும் தருவார்கள். அந்த மேற்கத்திய உணவு எங்களுக்குப் பிடிக்கும். அவர்களுக்கு எங்களின் சாப்பாடு பிடிக்கும். இப்படி எங்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தோம். 
 
இந்த நிலையில் 1983-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார்கள். எங்களின் எல்லா நட்பும் தடம் தெரியாமல் மாறத்தொடங்கியது.எங்களுக்குள் திடீரென்று தேச எல்லைகள் முளைத்தன. சிநேகம் காட்டிய சிங்களர்கள் சீறத் தொடங்கினார்கள். 
 
இலங்கைக் கடற்படையினர்
கடலில் எல்லை கடந்தவர்களை சுட்டுத் தள்ளினார்கள். இதுவரை 350 மீனவர்களை துப்பாக்கி சூட்டில் இழந்திருக்கிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து ஊனமாகியிருக்கிறார்கள். படகுகள், வலைகள், மீன்கள் என்று கோடிக்கணக்கான எங்களின் உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் களவாடப்பட்டன. 
 
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகள் 
சரி, விடுதலைப்புலிகள் பிரச்னை இருக்கும் வரை நமக்கு இதுதான் விதியென்று பொறுமை காத்தோம். விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்த காலமும் வந்தது. மீண்டும் 1983-க்கு முந்தைய வசந்த காலம் திரும்பும் என்று நினைத்திருந்தோம். 
 
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்
ஆனால், நிலைமை முன்பைவிட மோசமானது. இப்போது சிங்களர்கள் மட்டுமல்ல, சீன ராணுவத்தினரும் சேர்ந்துகொண்டு எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது? என்று புரியாமல் தவித்து வருகிறோம். மீன் பிடிக்கும் தொழிலே எங்களுக்கு வாழ்வா..? சாவா..? என்ற போராட்டமாக மாறியுள்ளது.”
 
விடுதலையாகி நாடு திரும்பும் மீனவர்
“கடல் எல்லையை கடப்பதால்தானே இத்தனை பிரச்னையும், இந்திய கடல் எல்லைக்குள்ளே மீன் பிடிக்கலாமே..? மீனவர்களுக்கு கடல் எல்லை தெரியாதா..?”
 
“தெரியும்! மீனவர்களுக்கு நன்றாக கடல் எல்லைகள் தெரியும். ஆனாலும் எல்லை கடந்து சென்று மீன் பிடிப்பது என்பதை நாங்கள் பரம்பரை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். இது பாரம்பரியமாக வந்த பழக்கம். அதை விட முடியவில்லை. 
 
அது மட்டுமல்ல. மீன் பிடிப்பதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று இழு வலை முறை. மற்றொன்று தள்ளு வலை முறை. இந்திய மீனவர்கள் பயன்படுத்துவது இழுவலை முறையை. இலங்கை மீனவர்கள் உபயோகிப்பது தள்ளு வலை முறையை. 
 
இழுவலையில் சில வகை மீன்களும், தள்ளு வலையில் சில வகை மீன்களும் தான் சிக்கும். இயற்கையின் வினோதம் என்னவென்றால், நமக்குத் தேவையான மீன்கள் இலங்கைக் கடற்பகுதியிலும், அவர்களுக்கு தேவையான மீன்கள் இந்திய கடற்பகுதியிலும் இருப்பதுதான். 
 
மீன்பிடிக்க புறப்படும் மீனவர்கள்
ஒரு இந்திய மீனவன் இந்திய கடற்பகுதியில் மட்டும் மீன் பிடித்து திரும்பினால் அவன் நஷ்டத்தோடுதான் வீடு திரும்புவான். அவன் குடும்பம் பட்டினியோடுதான் போராடவேண்டும். 
 
மீனவன் ஒருமுறை கடலுக்கு போய்வர 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அதைவிட அதிகமான மீன்களைப் பிடித்து கரைக்கு திரும்பினால்தான் லாபம். 
 
காலை 6 மணிக்கு கடலுக்குப் போய் மறுநாள் காலை 10 மணிக்கு கரை திரும்புவார்கள். ஒருதடவை போய்வர 200 முதல் 300 லிட்டர் வரை டீசல் தேவை. வாரத்துக்கு மூன்று முறை என்ற கணக்கில் மாதத்திற்கு 12 முறை கடலுக்குள் போய்வருவோம். 
மீன்களுடன் கரை திரும்பும் மீனவர்கள்
அதற்காக அரசு மானிய விலையில் 15,000 லிட்டர் டீசலை வருடத்திற்கு தருகிறது. இது போதுமானதாக இல்லை. எங்களுக்கு ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. வருடத்தில் 10 மாதமும் கடலுக்குள் செல்வதால் 30,000 லிட்டர் டீசல் மானியத்துடன் அரசு கொடுத்தால் நல்லது. 
 
1983-ல் ராமேஸ்வரத்தில் வெறும் 200 படகுகள் தான் இருந்தன. இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இவற்றில் சில படகுகளில் அனுமதிக்கப்பட்ட திறனைவிட கூடுதல் திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துகிறார்கள். 
 
அதிலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, சுருக்கு மடிவலை முறையை பயன்படுத்துகிறார்கள். இதனால் கடலின் மொத்த வளமும் சுரண்டப் படுகின்றன. 
 
சாதாரண படகின் மூலம் 12,000 ரூபாய்க்கு மீன் பிடித்து திரும்புவதே பெருங்காரியமாக இருக்கும்போது, தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு, அதிக சக்தி வாய்ந்த படகுகள் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் மீன்களை பிடித்து வந்து விடுகிறார்கள். 
 
இதேநிலை நீடித்தால் நமது சந்ததிக்கு மீன் கிடைக்காது. வருமானம் முக்கியம்தான். அதைவிட வருங்காலம் மிக முக்கியம். வருங்கால சந்ததியை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும்.
 
கடலில் மீன் வளத்தை அதிகரிக்க 2 முதல் 3 வருடங்கள் எடுத்துக் கொள்ளாம். அந்த காலங்களில் மீனவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். இப்படி 3 வருடங்கள் மீன் பிடிக்காமல் பொறுத்திருந்தால் கடலில் ஏராளமான மீன்கள் பெருகும். வருங்காலத்தையும் கடல் வளத்தையும் காக்க முடியும். 
 
மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்சனைகளை அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் மீனவர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. உண்மையான அக்கறையோடு அரசு செயல் பட்டால் மீனவர்கள் வாழ்வு உயரும்.” என்று உணர்வு பொங்க கூறி முடித்தார் என்.ஜே.போஸ்.