பா.ம.க ஜனவரி-2016ல் தேர்தல் அறிக்கை வெளியீடு: மருத்துவர் ராமதாஸ்

 

சட்டமன்ற தேர்தலுக்கான, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை, வரும், ஜனவரியில் வெளியிடப்படும் என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கரூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு, வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ள, 500 கோடி ரூபாய் போதாதது. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சுனாமி, தானே புயல்களால் ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, தி.மு.க.,அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

தேசிய அளவில் இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதும், தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. இதற்கு, தி.மு.க. அ.தி.மு.க ஆகிய கட்சிகள்தான் காரணம். மாநில அளவில் மட்டுமல்ல, மாவட்ட அளவிலும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் அமைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள சென்னையில் அம்மா படகு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என, தமிழக அரசுக்கு யோசனையாகவே சொல்கிறேன். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், வழக்கறிஞர்கள் எளிதாக மற்ற நீதிமன்றங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை, உயர்நீதிமன்ற நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, மணல் கொள்ளை குறித்து பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மணல் கொள்ளையை கண்டுகொள்ளவில்லை. பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், தி.மு.க. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்க மாட்டோம். அதை நீதிமன்றங்கள் பார்த்து கொள்ளும். வரும் ஜனவரியில், பா.ம.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வாஜ்பாய், மன்மோகன்சிங் பிரதமராக, பா.ம.க ஆதரவு அளித்த போது, குறைந்தப்பட்ச செயல் திட்டம் இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க வுடன் வைத்தது தொகுதி உடன்பாடு தான். அது முடிந்து விட்டது. பா.ம.க ,வோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சிகள் குறித்து, தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.