நண்பருக்கு வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி பரிசளித்த கல்லூரி மாணவி

வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை இளம்பெண் ஒருவர் திருடி நண்பருக்கு பரிசளித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் சங்கர், என்பவருடைய மகள் நந்தினி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

சங்கரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணம் என மொத்தம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் மாயமாகி இருப்பதை கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இருவரும் வீட்டில் தேடிப்பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து மகள் நந்தினியிடம் கூறியதோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அப்போது பெற்றோரிடம் கூறியநந்தினி, எனக்கும் எலகங்காவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கொடிகேஹள்ளி டாடா நகரை சேர்ந்த ஷாருக் முக்காந்தர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

எனது நண்பர் ஷாருக் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மிக கஷ்டமானநிலையில் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார்.

அதனால் வீட்டில் இருந்த தங்க நகை, பணத்தை நான் தான் எடுத்து அவருக்கு பரிசளித்தேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினியின் பெற்றோர் நந்தினி பரிசளித்த நகை, பணத்தை ஷாருக்கிரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என நியூ டவுன் பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஷாருக் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில்அளித்த புகாரில், நந்தினியின் பெற்றோர் என்னை கடத்தி, 2 நாட்கள் சிறை வைத்து உடல் ரீதியாக தொல்லை தந்தனர்.

மேலும் நகை, பணத்தை திரும்ப கொடுப்பதாக நான் கூறியதை தொடர்ந்து அவர்கள் என்னை விடுவித்தனர் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.