வழிப்பறி செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து விதித்து கோவை நீதிமன்றம் நீதிபதி என்.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.

 

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சிராஜுதீன் மகன் ஜெய்னுலாபுதீன் (22).

அவர் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் கணக்கராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மேட்டுப்பாளையம் சிவன் திரையரங்கம் அருகே கடந்த 4.1.2014 அன்று நடந்து சென்ற இவரிடம், அதே பகுதியில் உள்ள எஸ்.எம். நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் ஜெய்லானி (24) கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500, கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துள்ளார்.

ஜெய்னுலாபுதீன் சப்தம் போட்டவுன் உதவ வந்த மக்களையும் கத்தியைக் காட்டி ஜெய்லானி மிரட்டினாராம். இதுகுறித்து ஜெய்னுலாபுதீன் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், ஜெய்லானியை கைது செய்தனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக எம்.கே.இளங்கோவன் ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணை கோவை 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.பிரபாகரன், ஜெய்லானிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.