பிரதமர் மோடியின் இலக்கு இல்லாத பொருளாதார கொள்கை : மன்மோகன் சிங்

 

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, நேற்று நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார்.

 

அப்போது மன்மோகன் சிங் பேசியதாவது:–

 

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு எதையும் செய்யவில்லை என்ற மோடியின் பிரசாரம், கெட்ட நோக்கம் கொண்டது. இந்தப் பொய்களை நாம் அம்பலத்துக்கு கொண்டு வரவேண்டும்.

 

இலக்கே இல்லாமல் சென்று கொண்டிருக்கும், தற்போதைய மத்திய அரசின் கொள்கைகளுடன் ஒப்பிடுகிறபோது, பொருளாதார வளர்ச்சிக்கு காங்கிரஸ் செய்த பங்களிப்பை சரித்திரம் சொல்லும்.

ஜவகர்லால் நேருவும், இந்திரா காந்தியும்தான் நாட்டின் விவசாயத்துறை வளர்ச்சிக்குக் காரணம். தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களிடம் இருந்து பிரதமர்  மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 இந்த நாட்டை ஒவ்வொரு விதத்திலும் இந்திரா காந்தி  முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்றவர் . அவர் பிரதமராக பதவி ஏற்றபோது நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருந்தது.

 

விவசாய துறையில் அக்கறை செலுத்தும்படி இந்திரா காந்தி  விஞ்ஞானிகளை அறிவுறுத்தினார். அப்படி பிறந்ததுதான் பசுமைப்புரட்சி.

 

வறுமையை ஒழிப்பதில், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொள்கைகளில் குறிப்பிட்ட முக்கியத்துவம் தரவேண்டும்.

 

அந்த வகையில், வறுமையை ஒழிப்பதில் திட்டக் கமிஷன், முக்கிய பாதை வகுத்துத்தந்தது. ஆனால் இன்று திட்டக்கமிஷனையே ஒழித்துக்கட்டி விட்டார்கள்.

 

பிரதமர் நரேந்திர மோடி திட்ட கமிஷனை ஒழித்துக்கட்டியதின் மோசமான விளைவுகள் குறித்து மக்களிடம் தொண்டர்கள் எடுத்துச்சொல்ல வேண்டும். நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கைகள் இலக்கு இல்லாதவை. அவற்றை கவனித்து வாருங்கள்.

 

இளைஞர்களை, இளைஞர் காங்கிரசார் ஒன்று திரட்ட வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் செல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று  மன்மோகன் சிங் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.