இந்தியாவில் பசுவை கொல்பவர்களுக்கு வாழஉரிமை கிடையாது : முதலமைச்சர்

 

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் இந்தியாவில் பசுவை கொல்பவர்களுக்கு வாழஉரிமை கிடையாது என்று கூறிஉள்ளார். 

 உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர்ஹரிஷ் ராவத் பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்தை ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்து உள்ளார். பசுவை கொல்பவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரிஅவர்களுக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை கிடையாது என்று  தெரிவித்துள்ளார்.

 மேலும்  உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதனையும் செய்யும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.  பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில தனது அரசில் பரிந்துரைகளை தான் தாக்கல் செய்ததாகவும், நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்துதீவணமும் வழங்கிவருகிறது என்றும் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் கூறிஉள்ளார். 

 உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி என்னும் இடம் அருகே மாட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக கூறி இக்லாக் என்பவர் கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதனையடுத்து நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இவ்விவகாரம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் ஹரிஷ் ராவத் கருத்து அமைந்து உள்ளது.

 தாத்ரி சம்பவம் பற்றி, அரியானா முதலமைச்சர்கட்டார் அண்மையில் கூறும்போது முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்றால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிடவேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாயின. பின்னர் அவர் விளக்கம் அளிக்கையில் இரு பிரிவினரும் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். மாட்டிறைச்சி பிரச்சினையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அரியானா முதலமைச்சர் கட்டாரை நேரில் வரவழைத்து அமித்ஷா கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.