புகார் தெரிவித்த நபரை தள்ளி விட்ட தமிழக அமைச்சர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை தமிழக அமைச்சர் ப.மோகன் பார்வையிட்டு வருகிறார். அதன்படி கடந்த 14-11-2015 அன்று அம்மன் நகருக்கு வந்த அமைச்சர் மோகனை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவரிடம் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய ஒருவரை பேசவிடாமல் அமைச்சர் ப.மோகன் தடுத்து அவரை தள்ளி விட்டார்.

கழிப்பிடம் கட்டுவதற்காக அரசு கொடுக்கும் 12000 ரூபாயில் 2 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு 10000 ரூபாய் மட்டுமே கொடுப்பதாக புகார் தெரிவித்த மக்களிடம், யார் என்று சொல்லுங்கள் இப்பவே கேட்கிறேன் என்று அமைச்சர் காட்டமாக கூறினார்.

அதற்கு பொது மக்கள்கணக்கு எடுக்க வருகிறவர்கள்தான் என்று தெரிவிக்கவே ”அந்த இடத்தை எல்லாம் நான் வரும்போதே பார்வையிட்டு தான் வருகிறேன் ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார். அப்போது பொதுமக்களில் இருந்த ஒருவர், எல்லோரும் ஒன்னா சேர்ந்து சொல்கிறோம் ஆனால் நீங்கள் நிறுத்துன்னு சொல்றீங்க? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குள் அமைச்சர் மோகன் அந்த நபரை பேச விடாமல் பிடித்து தள்ளி விட்டார். இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினர்அந்த நபரை அந்த இடத்தில் இருந்து வெளியே தள்ளிக்கொண்டு சென்று விட்டனர். இந்த காட்சிகள் அடங்கிய காணொளி வாட்ஸ்ஆப்பில் வைரலாக தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

COURTESY & VIDEO SOURCE : விகடன்