தமிழகத்தில் மாயமான மாணவ மாணவியர்களை மீட்ட பெங்களூரு போலீசார்

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, ஒரு மாணவர் மற்றும் ஐந்து மாணவியர்கள் திடீரென மாயமான நிலையில், அவர்களை ரயில்வே காவல் துறையினர் பெங்களூருவில் மீட்டு பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம்குளித்தலை அடுத்த, இரும்புதிப்பட்டி இலங்கை தமிழர் முகாமில், சந்தரலிங்கம் மகள் டிசாந்தினி, முருகையா மகள் நிவேதா ஆகியோர், அழகுரத்தினம் மகள் சரஸ்வதி, சுந்தரலிங்கம் பேத்திருவேணி, குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கின்றனர். அதேபகுதியைச் சேர்ந்த ராசு மகள் நிவேதா, அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர்கள், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர்கள், மீண்டும் அவரவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக, குளித்தலை காவல் நிலையத்தில் பெற்றோர் தனித்தனியாக புகார் அளித்தனர்.

குளித்தலை இணை காவல் கண்காணிப்பாளர் ஜமீம் தலைமையிலான போலீசார்,சம்பவ நாளன்று, மாணவியர் ஐவரும், பள்ளிக்கு செல்லவில்லை என்பதை உறுதிசெய்து பல இடங்களில் மாணவ மாணவியர்களை மீட்க தேடி வந்தனர்.மேலும் தமிழர் முகாமை சேர்ந்த சுதாகர் மகன் ஜான்சன், 20, என்பவரும் காணவில்லை. இவர், தொட்டியம் பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வருகிறார்.

ஒரே நாளில், ஐந்து மாணவியர் மற்றும் ஒரு மாணவர் மாயமானது குறித்து, மாயனூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம், ரயில்வே காவல் துறையினர் பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த, ஆறு பேர் மீட்கப்பட்டதாக, மாயனூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கொடுத்துள்ளனர்.

மாயனூர் மாயனூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ஆறு பேரையும் அழைத்து வர பெங்களூரு விரைந்த்துள்ளனர்.