செங்கோட்டை மேலூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: இரு தரப்பு மோதலில் 10 பேர் காயம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

செங்கோட்டை மேலூரில் இன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்வீச்சு நடந்ததில் விநாயகர் சிலை சேதமடைந்தது. இது பக்தர்கள் மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூரில் வீர விநாயகர் பக்தர்கள் சார்பாக விநாயகர் பிரதிஷ்டை செய்யப் பட்டு, அதற்கான ஊர்வலம் இன்று மாலை துவங்கியது.

சுமார் 8 மணி அளவில் ஊர்வலம் வழக்கமான ஊர்வலப் பாதையான, பள்ளிவாசலை அடுத்த பெரிய தெரு வழியாக வந்த போது சுமார் 200 இஸ்லாமிய சமூகத்தினர் தெரு முனையில் நின்று கொண்டு, ஊர்வலம் இந்த வழியே செல்லக் கூடாது என்று வழி மறித்தனர்.

ஆனால், இது வழக்கமான பாதை என்றும், போலீஸ் அனுமதியுடன் இந்த ஊர்வலம் நடப்பதாகவும் ஊர்வலத்தில் முன்நின்று சென்றவர்கள் கூறினர்.

விநாயகரின் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னே சென்று கொண்டிருந்தனர். விநாயகர் சிலைக்குப் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் தொடர்ந்து வந்தனர். இதனால் ஊர்வலத்தினர் அதிகம் இருந்த போதும், இஸ்லாமிய சமூகத்தினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் எழுந்தது.

இத்தகைய சூழலை காவல் துறையினர் எதிர்பார்க்கவில்லை. உதவி ஆய்வாளர் தமிழ், ஆய்வாளர் சுரேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே காவலர்கள் இருந்தனர். இதனால் காவல்துறை அதிகாரிகள் முன்வந்து இருதரப்பிலும் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சமரச முயற்சிக்கு போலீஸார் முயன்றதும், ஒரு கட்டத்தில், ஊர்வலத்தை தொடர்ந்து நடத்துவது என தீர்மானமாகி, ஊர்வலம் அமைதியாகத் தொடர்ந்தது.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலர், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, அருகே வீடு கட்டுவதற்காக என்று தயாராக குவித்து வைக்கப் பட்டிருந்த செங்கற்கள், மணல், ஜல்லி ஆகியவற்றை, ஊர்வலத்தினர் மீது வீசியெறியத் தொடங்கினர்.

செங்கல்லும் மண்ணும் விநாயகர் மீதும் விழுந்து விநாயகர் சிலையும் சிறிது சேதம் அடைந்தது. விநாயகர் சிலை மீது கற்கள் விழுந்ததால் ஆத்திரமடைந்த ஊர்வலத்தினர், தாங்களும் கற்களை எடுத்து சரமாரியாக எறியத் தொடங்கினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நிலைமையை காவல்துறையினரால் சமாளிக்க இயலவில்லை. கற்கள் எறியப் பட்டதில் உதவி ஆய்வாளர் தமிழ்ச் செல்வனுக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினர். இருப்பினும், இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை எடுத்து வீசியதில், இரு தரப்பிலும் சேர்ந்து சுமார் பத்து பேருக்கு காயம் ஏற்பட்டது. தடியடி நடத்திய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனிடையே பள்ளிவாசலை அடுத்துள்ள தெருவின் முகப்பில் இருந்த கட்சிக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் சாய்க்கப் பட்டன. இரும்புக் கம்பங்கள் வளைத்து சாலையை மறித்தார்ப்போல் சாய்க்கப் பட்டன. அங்கங்கே கற்கள் சிதறிக் கிடந்தன. மசூதி பகுதியை ஒட்டி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள், வீடுகளின் முகப்பும் ஊர்வலம் வந்தவர்களின் கல்வீச்சில் தப்பவில்லை. இந்தக் கல்வீச்சில் செய்தியாளர்களின் வாகனங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 10 கார்கள், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன.

இதை அடுத்து போலீஸார் அளித்த தகவலின் பேரில் கூடுதல் படைகள் அங்கே குவிக்கப் பட்டன. இரு தரப்பு மோதலால் அந்த இடமே பதற்றத்துக்கு உள்ளானது. இருப்பினும், இரு தரப்பினரும் சிறு சிறு குழுக்களாக அங்கங்கே நின்றபடி பேசிக் கொண்டிருந்ததால் மேலும் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவியது.

இந்நிலையில் இஸ்லாமிய தரப்பின் அடாவடிப் போக்கை கண்டித்து தாலுகா அலுவலகம் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் போலீஸாரை முற்றுகையிட்டு காலைக்குள் நிலவரம் சரியாக வேண்டும்; ஊர்வலம் எந்த அசம்பாவிதமும் இன்றி நிறையவடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே இருந்த ஏடிஎம் அறை ஒன்று கல்வீசித் தாக்கப் பட்டது. இதில் ஏடிஎம் அறை கண்ணாடிகள் நொறுங்கின.

இந்நிலையில் விநாயகர் கமிட்டி அமைப்பினரை அவரவர் இடங்களுக்கு கலைந்து செல்லுமாறு வற்புறுத்திய போலீஸார், இரவு நேரத்தில் அசம்பாவிதம் ஏதும் நேராமல் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.