தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து ஓரிரு நாளில் அறிக்கை : பாஜக குழு இன்று ஆய்வு

 

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் அடங்கிய குழு இன்று 21-11-2015ஆய்வு செய்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆய்வினைத் தொடங்குகிறது. இதன்பின், சென்னை தாம்பரம் உள்ளிட்ட மழையால் பாதிப்படைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளளனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேத பாதிப்புகள் குறித்த அறிக்கையை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஆய்வுக் குழுவினை மத்திய அரசு அனுப்பவுள்ளது. தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பருவமழையால் ஏற்பட்ட சேத விவரங்களைத் தொகுக்கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையரகம் ஈடுபட்டிருந்தது.

இந்த சேத விவரங்களைத் தொகுத்து அவற்றை அறிக்கையாகத் தயாரிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. இந்த அறிக்கையானது ஓரிரு தினங்களில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்ளும் என தெரிகிறது