தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மகன் கதாநாயகனாக நடிக்கும், தமிழன் என்று சொல்லடா படம் மூலம், மீண்டும் நடிக்க வருகிறார்.

விஜயகாந்த் கடைசியாக, விருதகிரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அதன் பின் தீவிர அரசியலில் ஈடுபட்ட விஜயகாந்த் சினிமா பக்கம் திரும்பாமல் சமீபத்தில், அவரது மகன் சண்முக பாண்டியன் நடித்த, சகாப்தம் படத்தில், சில காட்சிகளில் மட்டும் நடித்தார்.

எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம்,ஓடவில்லை.தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு, ஆரம்ப கட்டத்தில் தோள் கொடுத்து உதவிய விஜயகாந்த், தன் மகனுக்கும் தோள் கொடுக்க தயாராகி விட்டார்.

சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் தமிழன் என்று சொல்லடா என, பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை புதுமுக இயக்குனர் அருண் இயக்குகிறார். படத்தை, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளார்.

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், படத்தில் அரசியல் ‘பஞ்ச்’ வசனங்கள் மற்றும் புரட்சிகர பாடல்கள் இடம் பெறும் என தே.மு.தி.க., வட்டாரங்களால் கூறப்படுகின்றது.