இஸ்ரோ நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை

நம்பிநாராயணன் தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி,  நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். 

புது தில்லி: வெளிநாட்டுக்கு உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது கடந்த 1994இல் வெளிநாட்டுக்கு உளவு பார்த்தார் என்று குற்ம் சாட்டப்பட்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவு பார்த்து, மாலத்தீவு உளவுப்பிரிவை சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபவுசியா ஹசன் எனும் 2 பேருக்கு வழங்கியதாக  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதை அடுத்து இந்த வழக்கில் நம்பி நாராயணன்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தாம் கடுமையாக துன்புறுத்தப் பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தம்மிடம் விசாரணை நடத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், இஸ்ரோ உயரதிகாரிகளை சிக்க வைக்கும் வகையில் வாக்குமூலம் அளிக்குமாறு வற்புறுத்தினர் என்றும், தாம் அதற்கு உடன்படாததால்,  தன்னை கொடூரமாக சித்ரவதை செய்தனர் என்றும்நம்பி நாராயணன் கூறியிருந்தார்.

இந்நிலையில் கேரள போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ.,யின் விசாரணையில் நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுகள்  வெறுமனே புனையப் பட்டவை என தெரியவந்தது. இதை அடுத்து இந்த வழக்கு 1996 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. மேலும், 1998ல் உச்ச நீதிமன்றமும் நம்பி நாராயணனை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில் கேரள அரசு நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டன. தொடர்ந்து, தம்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நம்பிநாராயணன் தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி,  நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.