முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் நிதி கேட்டு பிரதமரிடம் பேசாதது ஏன் ? : மு.க.ஸ்டாலின் கேள்வி

 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி மக்களை
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.
 
அகரம் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், மகாத்மாகாந்தி நகர், ராஜீவ்காந்தி நகர், அன்னை சத்யா நகரில் உள்ள மக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் 5 கிலோ அரிசி, பிரட், பால், போர்வை மற்றும் பிஸ்கட்டுகள் ஆகிய வைகளை 3,500 பேருக்கு வழங்கினார்.
 
அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
இன்றைக்கு மத்திய அமைச்சராக இருக்க கூடிய நிர்மலா சீராமன் பல பகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறார். மக்கள் அவரிடமும் முறையிட்டுள்ளார்கள். மாநில அரசு, மத்திய அரசிடம் இது வரைக்கும் இந்த மழையைப் பற்றியோ, இந்த மழைக்குரிய நிவாரணங்கள் கேட்டோ எந்தவித ஆய்வு அறிக்கையும் கொடுக்கவில்லை என்று பகிரங்மாக சொல்லி இருக்கிறார்.
 
இரண்டு வாரமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் 19ந்தேதி தான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்யிடம் முதலமைச்சர் ஜெயலலிதா பேசி நிவாரணப் பகுதிகளை பார்வையிட குழு அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்போது கூட பிரதமரிடம் பேசி நிதி கேட்கவில்லை.
 
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது போல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 5 ஆயிரமும், இறந்தவர்களுக்கு குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்கிட வேண்டும்.
 
நிவாரண தொகை வழங்குவதற்கென்று, ஒரு தனி குழு அமைக்க வேண்டும். அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் அதே இடம் பெற வேண்டும். அந்த குழுவின் மூலமாக தான் நிவாரணப் பணிகள் நடைபெற வேண்டும் என்று தலைவர் கலைஞர் கூறியிருக்கிறார். அப்படி நடந்தால் அது முறையாக மக்களுக்குப் போய் சேரும்.
 
இல்லையென்றால் தேர்தலுக்காக அவர்கள் இதை பயன்படுத்தக் கூடிய ஒரு சூழ்நிலை நிச்சயமாக உருவாகும் என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.