சொந்த செலவில் சாலையை சீர்செய்த காவல் துறை அதிகாரிகள்

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகருக்குள் வரும் வாகனங்கள் பழுதில்லாமல் வர,சொந்த செலவில் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர்.

கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் அனைத்து புறநகர் பஸ்களும் கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள நுழைவு வாயில் வழியாகத்தான் வர வேண்டும்.

அண்ணா நூற்றாண்டு நினைவு வாயில் வழியாக தான் பெங்களூர், சேலம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நகருக்குள் செல்ல முடியும்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை, கடந்த சில ஆண்டுகளாக பழுதாகி குண்டும், குழியுமாக காட்சியளித்தது. பழுதாகிய சீர்செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடமும் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

தொடர் மழையால் இந்த சாலை மேலும் பழுதாகி, வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நுழைவு வாயில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அத்துடன் வாகனங்களில் அமர்ந்து பயணிப்பவர்கள் பெரும் அச்சத்துடன் தான் பயணம் செய்தனர். காரணம் இந்த நுழைவு வாயில் மீது வாகனம் மோதினால் அது கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

இந்த நுழைவு வாயில் வழியாக செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி, பலர் காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சாலை சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசு அறிவுறுத்தலின்பேரில், கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீஸ் காவல் ஆய்வாளர் செல்வமணி, ஏட்டுகள் நவீத்பாஷா, அருள்பிரகாஷ், வடிவேலு மற்றும் பூங்காவனம் ஆகியோர் தங்களது சொந்த செலவில், நுரம்பு மண்ணை வாங்கி, சாலையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த மேடு, பள்ளங்களை காவல் துறை சீருடையுடன் அவர்களே சமன் செய்தனர். அரசில் காழ்ப்புணர்ச்சியால் சீர் செய்யப்படாத இந்த சாலையை, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சீர் செய்த போக்குவரத்து போலீசாரை பஸ் டிரைவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.