மின்சாரா விபத்தில் சிக்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய பெற்றோர்கள் மின்சாரம் தாக்கி பலி

 
 
சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் 6-வது தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளிகருணாநிதி(வயது 29).அவரது மனைவி சுதா(26). அவர்களுக்கு ஆர்த்திஸ்ரீ(4), திவ்யாஸ்ரீ(2) என 2 மகள்கள் உள்ளனர்.
 
மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு நேற்று இரவு 7 மணியளவில் கருணாநிதி தனது மனைவி, 2 மகள்களுடன் வீடு திரும்பினார். வழியில், வீட்டின் அருகே உள்ள மாவு கடையில், இரவு உணவு தயாரிக்க மாவு வாங்குவதற்கு நின்றிருந்தார்.அப்போது மின் கம்பத்தில் இருந்த உயர் அழுத்த மின்சார வயர் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதைக் கண்டதும் பதறிய பெற்றோர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அருகில் உள்ள மணல் பகுதியில் அவர்களை தள்ளிவிட்டனர்.
 
அப்போது அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்சார வயர் கருணாநிதி, சுதா ஆகியோர் மீது விழுந்தது.
இதில் பெற்றோர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதைக் கண்ட 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.
 
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டனர். பின்னர், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சார இணைப்பை துண்டித்தனர். காயங்களுடன் இருந்த 2 குழந்தைகளையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வேளச்சேரி பைபாஸ் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது.அடிக்கடி மின்சார வயர்களும் அறுந்து விழுகின்றன. இதுபற்றி மின் வாரியத்திற்கு பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மின் வாரியஅலட்சியத்தால் தற்போது 2 பேர் பலியாகி 2 குழந்தைகளும் அனாதையாகி விட்டனர் என்று ஆவேசத்துடன் கூறினர்.
 
இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை உதவி ஆணையர்கள் கண்ணன், முருகேசன், குமார், அழகு, நந்தகுமார், தன்ராஜ் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.
ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோ, ‘‘2 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமான மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று மறுத்தனர்.
 
இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குழந்தைகளை காப்பாற்ற தம்பதியர் தங்களுடைய உயிரை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.நீண்ட நேரத்திற்கு பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.