கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

 
சென்னை ஓட்டேரியில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியனார்.
 
ஓட்டேரி பரசுராமன் தெருவில் வசிப்பவர் ராதாபாய் (45). இவரது கணவர் ரவிக்குமார் (50), சில ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர்களின் மகன் ராஜூ (23). கிண்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
 
ராதாபாயின் வீட்டுக்கு அருகில் ஜமால் என்பவரின் வீடு உள்ளது. பாகப்பிரிவினை செய்வதில் தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் வீடு பாழடைந்து கிடந்தது. பழமையான வீட்டை இடிக்க அண்டைவீட்டார் தடை உத்தரவு பெற்றதால், இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
 
சென்னையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் வீடு, மேலும் பலம் இழந்து நேற்று காலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.
 
கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய ராஜூ, ராதாபாய் இருவரையும் மீட்டு ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் ராஜூ பரிதாபமாக உயிரிழந்து விட்டார். படுகாயம் அடைந்த ராதாபாய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.