முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு தந்தால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் : சரத்குமார்

 
 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல அலுவலகம் நெல்லை மாவட்ம் பாளையங்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது.
 
அந்த கட்சியின் நிறுவன தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சரத்குமார் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பேசியதாவது :–
 
ச.ம.க. தொண்டர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உழைத்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும். எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை மக்கள் தான் உருவாக்கவேண்டும். எல்லா கட்சியினரும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு பொற்கால ஆட்சியை தந்தவர் காமராஜர். அப்படி ஆட்சி அமையவேண்டுமானால் தன்னலம், சுயநலமற்ற வாழ்வு வாழ வேண்டும். அரசியல் சாக்கடை என்று நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். அந்த சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டுமானால் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நமக்கு ஏன் என்று விலகி செல்லக்கூடாது.
 
சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். நாம் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். இருந்தாலும் ஏன் தேர்தல் அறிக்கை என்றால், நமது கட்சியின் குறிக்கோளை வெளிகாட்டுவதற்காகத்தான். இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அடுத்த மாதம் கோபிச் செட்டிபாளையத்தில் ச.ம.க. மாநாடு நடைபெறுகிறது என
சரத்குமார் கூறினார்.
 
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறுகையில், தேசிய கொடி தலைகீழாக இருந்ததை பிரதமர் கவனிக்காதது வருந்தத்தக்கதாகும். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் இதற்கு மன்னிப்பு கேட்டு உள்ளனர். சென்னையில் அதிக அளவில் மழை பெய்து உள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் மழைச்சேதம் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக அளவில் வெள்ள நிவாரணம் வழங்கவேண்டும்.
 
தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட, முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் கட்டும்பணி 40 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வருடத்தில் திறக்கப்படும். ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் அமைப்பதற்கு நான் பல முறை சட்டசபையில் பேசி உள்ளேன். அந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியரும் , பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரனும் ஆய்வு செய்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கத்தில் 15 வருடங்களாக நாங்கள் சிறப்பான பணிகளை செய்து உள்ளோம். புதிய நிர்வாகிகள் ஆலோசனை கேட்டால் சொல்வோம் என செய்தியாளர்களிடம் சரத்குமார் தெரிவித்தார்.