காதலியை கடத்தி விடுதியில் கற்பழித்த பொறியாளர் கைது

 
 
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு கடத்தி வந்து காதலியை கற்பழித்து விட்டு திருமணத்துக்கு மறுத்தபொறியாளர் கைது செய்யப்பட்டார்.
 
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 28). பொறியாளர் பட்டதாரி. கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா(24), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சித்ராவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திக் மதுரைக்கு அழைத்து வந்தார். மதுரையில் கோச்சடை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கினார்கள். அப்போது ஆசைவார்த்தை கூறி சித்ராவை கார்த்திக் கற்பழித்ததாக தெரிகிறது. இதன்பின் ஏற்கனவே உறுதி அளித்தது போல் சித்ராவை திருமணம் செய்து கொள்ள கார்த்திக் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காதலர்கள் இருவரும் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு சித்ரா தெரிவித்துள்ளார்.
 
இதை நம்பி கார்த்திக்கும் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரிடம் நடந்த சம்பவத்தை சித்ரா கூறியுள்ளார். காதலரான கார்த்திக் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதையும் தெரிவித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
 
அப்போது தான் வயிறு வலிப்பதாக கூறி சித்ரா தந்திரமாக தப்பி வந்தது கார்த்திக்குக்கு தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து கரிமேடு காவல்
நிலையத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
 
காதலர்கள் இருவரும் தங்கி இருந்த ஓட்டல் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சரகத்துக்குட்பட்டது என்பதால் சம்பந்தபட்ட காவல் நிலையத்தினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து கார்த்திக், சித்ரா ஆகியோரது பெற்றோருக்கு தெரிவித்து அவர்களை போலீசார் மதுரைக்கு வரவழைத்தனர். அவர்கள் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
முதலில் சித்ராவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த கார்த்திக், பின்னர் மறுத்துவிட்டார். இதனையடுத்து திருமண ஆசை காட்டி கடத்தி வந்து பெண்ணை பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்