கூட்டுறவு வங்கியில் தீ விபத்து : ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

 
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் தோரண வாயில் அருகே பசுமலை கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் ரூ.10 கோடி நகைகள், பணம் தப்பின.
 
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இந்த வங்கி பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் வங்கிக்குள் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை இயேசு என்ற காவலாளி கவனித்து, உடனே வங்கியின் செயலர் மற்றம் காவல் நிலையத்தினருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்தனர். அதன் பேரில் மதுரை திடீர் நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வங்கிக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முற்பட்டனர்.
 
அதற்குள் மிக வேகமாக பரவிய தீ வங்கி முழுவதும் எரிந்து வெளியேறியது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் நவீன சோப்பு நுரை கருவி மூலம் தீயை பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்தில் வங்கியின் குளிர் சாதன கருவிகள், கணினிகள், ஆவணங்கள் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பாதுகாப்பு பெட்டக அறைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அந்த அறையில் இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் தப்பியது.
 
கூட்டுறவு வங்கியின் மிக அருகில் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு விட்டது. மவிற்பனை நிலையத்தில் தீ பரவியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தினர்.வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.