தாமிரபரணி புஷ்கரம் குழப்பத்துடனேயே நகர்கிறது. ஆரம்பம் முதலே அரசு ஒத்துழைப்பு சரியாக அமையவில்லை. மாவட்ட நிர்வாகம், இதை ஒரு முக்கியமான நிகழ்வாக, வட மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்துக்கு ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்ற எண்ணத்துடன் அணுகவில்லை என்றே தோன்றுகிறது.
அறநிலையத்துறை அதிகாரிகளோ, உண்டியல் காசு பார்ப்பதும், கோயில் நிலங்களை கமிஷன் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடுவதிலும்தான் குறியாக இருக்கின்றனரே தவிர, ஒரு முக்கியமான ஆன்மிக கலாசார நிகழ்வில் தாம் ஒரு முக்கியப் பங்காற்றப் போகிறோம் என்ற உள்ளுணர்வு துளியும் இல்லை என்றே எண்ண வைக்கிறது அவர்களின் நடவடிக்கைகள்.
அப்படிப்பட்ட எண்ணம் இருந்திருந்தால், மாவட்ட ஆட்சியர் ஏதோ சொல்ல, நெல்லை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அலட்சியமாக ஒரு சுற்றறிக்கையை அனுப்புவாரா?
ஒரு சுற்றறிக்கை… இப்போது அதற்கு ஒரு விளக்கம். ..! இடையில் ஆட்சியரின் பெயரைச் சொல்லி ஒரு ’மிரட்டல்’ … இப்படித்தான் அறநிலையத்துறை அதிகாரிகளின் லட்சணம் பல்லிளிக்கிறது என்று பொருமுகிறார்கள் அன்பர்கள்.
ஆட்சியர் தரப்பில் ஏற்கெனவே இரு படித்துறைகள் மட்டும் வேண்டாம்; மற்றவற்றில் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். சென்ற வாரமே இது குறித்து விவாதிக்கப் பட்டது. ஆனால் புதிதாக அறநிலையத்துறை இணை ஆணையர் பெயரில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. அதில், கோயில் மண்டபங்களையோ படித்துறைகளையோ ஆன்மிக அமைப்புகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக அறிவிப்பு..
எந்த இடத்திலும், இரு படித்துறை தவிர மற்றவற்றில் அனுமதி என்ற வார்த்தை இல்லை.. அடுத்து ஆகம விதி…?! புஷ்கரம் நடப்பதே நெல்லையப்பருக்காகத்தான்… தாமிரபரணித் தாய் கோயிலில் உத்ஸவர் விக்ரஹமாய் இருக்கிறாள்.. நவதிருப்பதி, நவகைலாயம் என எல்லாத் தலங்களும் தாமிரபரணியுடன் தொடர்பு கொண்டவை…
இங்கெல்லாம்… அந்த அந்த கோயில் அர்ச்சகர்கள் தான் ஆகம விதிகளுக்கு அத்தாரிட்டி என்பதால், அவர்கள் சொன்னால் உத்ஸவர் திருமேனிகள் தீர்த்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் படலாம் என்று ஒரு விளக்கம் வேறு கொடுக்கப் பட்டிருக்கிறது.
அடுத்தது.. அந்த அந்த ஊர் கோயில் செயல் அலுவலர்கள் அந்த அந்த கோயில் மண்டபங்கள். படித்துறைகளை பயன்படுத்த அப்போதைக்கு ஆய்வு செய்து, ஆன்மிக அமைப்புகள் பயன்படுத்த அவர்களே அனுமதி கொடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், ஒன்று மட்டும் நிச்சயம்… இணை ஆணையர் பரஞ்சோதி… ஏதோ உள்நோக்கத்துடன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. அநேகமாக அவர் பின்னணி திமுக.,வாக இருக்கலாம். முதல்வர் எடப்பாடியாருக்கு வரிசையாக ஆப்பு வைத்துக் கொண்டே வருகிறார். கும்பாபிஷேக நிகழ்வு தொடங்கி… ! என்கிறார்கள் நெல்லை வாழ் மக்கள்.
அறநிலைய துறை அறிக்கையும் முன்னுக்கு பின் முரணான தகவலும் பெருமளவில் குழப்பியிருக்கின்றன.
அறிக்கை வெளியிட்டு செய்திகள் வந்த பின்னார் திடீர் என அறநிலையத் துறை அதிகாரிகள் நெல்லையில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்த அறிவிக்கப்பட்டது.
அதிகாரி அறிக்கையில் உள்ளது போல வாசித்து விட்டு தடை என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றார் அறநிலையத்துறை அதிகாரி.
அறிக்கையில் திருக்கோவில் படித்துறை மற்றும் மண்டபங்களில் புஷ்கரம் நடத்த அனுமதிக்க கூடாது என கோவில் நிர்வாகிகளுக்கு கூறப்பட்டுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டபோது, அது தவறாக அனுப்பி விட்டார்கள் அதனால் தான் நாங்கள் விளக்கமளிக்கிறோம் என மழுப்பலாக பதில் சொன்னார்.
இதற்கு முன் புஷ்கரம் நடந்ததா என்று கேட்டதற்கு 2006 ல் நடந்தது என்றார்.
அக்டோபர் மாதம் மழையால் வெள்ளம் ஏற்படும் அதனால் தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை பகுதிகளில் அதிக வெள்ளம் ஏற்படுவதோடு அதிக நீரோட்டம் இருக்கும் அதனால் அனுமதியில்லை என்றார்.
பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை 18 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது என்று சொன்னவரிடம், இரண்டு அணைகளில் இருந்து நீர் திறந்தால் அதிவேகமாக நீர் வரும் பாபநாசம் படித் துறையில் அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அங்கிருந்து 65 கிமீ. தொலைவில் உள்ள தைப்பூச மண்டபத்தில் அனுமதி இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு முறையான பதில் கொடுக்கப் படவில்லை.
புஷ்கரம் நடக்கும் போது சுவாமி எழுந்தருளினால் அது ஆகம விதிமீறல் என்றார்.
ஆகம விதி குறித்து யார் கூறியது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அர்ச்சகர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு அவர்கள் அனுமதித்தால் சுவாமி எழுந்தருளல் செய்யலாம் என்றார்.
மற்ற படித் துறைகளில் அனுமதி இல்லை என்று முதல் அறிக்கையில் இணை ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகளோ அனைத்து கோவில்களிலும் படித் துறையில் பூஜைக்கு அனுமதி அளிக்கப் படும் என்றார். அனுமதி யார் தருவார் என்றால், இணை ஆணையாளர் தருவார் என்றார்.
தொடர்ந்து கேள்வி கேட்க அவர் வேறு எதற்கும் பதில் சொல்ல முடியாது என எழுந்து சென்றார். என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள். இப்போதுதான், இந்து இயக்கங்கள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் நியாயப் படுத்தப் படுகின்றன.
அறநிலையத்துறை அதிகாரிகள் அளித்த பேட்டியின் வீடியோ இது…