டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்கமாட்டார்; அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறார் என்று கூறியுள்ளார் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி!
ஓபிஎஸ்., டிடிவி தினகரன் என்று இருவரையும் சுற்றி அரசியல் நிலவரம் கலவரம் ஆகி வரும் சூழலில், ஓபிஎஸ்.,ஸுக்கு நெருக்கமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது கூறியவை…
இரண்டு தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விடும் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்று விட்டால் அரசியல் வாழ்வு இனி தனக்கு இருக்காது என தினகரன் முடிவு செய்திருக்கிறார்.
அந்த முடிவின் வெளிப்பாடுதான் கட்சித் தொண்டர்களை குழப்ப வேண்டும் என்ற நோக்கில், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார். நிச்சயமாக இந்தக் கருத்தை அதிமுக தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்; செவி சாய்க்க மாட்டார்கள்!
எம்ஜிஆர்., அவர்கள் கருணாநிதியைப் பார்த்து தீய சக்தி என்று கூறினார். அந்தக் கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு இன்றுவரை அவரை தீய சக்தியாகவே பார்க்கின்றனர்.
அதேபோல் இந்த இரண்டாவது கட்டப் போராட்டத்தில் எங்களுக்கு தீயசக்தியாக சசிகலாவும் தினகரனும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம்!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்… என்று பேசினார் கே.பி.முனுசாமி!