பாஜக வடக்கில் எப்படியோ தெரியாது; தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக நோட்டோவுடன் போட்டி போடும் ஒரு கட்சி; யாராவது தெரிந்தே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வார்களா? அக்கட்சியுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன்.
முன்னதாக, தினகரனுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு, வார்த்தைப் போர் குறித்து பெங்களூரில் செய்தியாளர்கள் மத்தியில் தினகரன் குறிப்பிட்டபோது, அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வாக்களித்தவர் ஓ.பி.எஸ். ஆனால் ராஜவிசுவாசம் குறித்து அவர் பேசுவது நியாயமா. ஓபிஎஸ் என்னிடம் பேசியது பொய் தகவல் என எல்லோரும் சொல்லி வந்தீர்கள். ஆனால் அவரே அதை ஒப்புக் கொண்டுவிட்டார்.
செப்டம்பர் கடைசி வாரத்தில் அதே நண்பர் மூலம், ஓ.பன்னீர்செல்வம் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். இதையும் ஓ.பன்னீர்செல்வம் வாயால் ஒப்புக்கொள்வார் அந்த சூட்சுமம் எனக்கு தெரியும்.
இன்னும் கொஞ்சம் அவருக்கு நேரம் கொடுக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் எல்லாவற்றையும் ஒத்துக் கொள்வார். அப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால் அந்த தகவலை நான் வெளியிடுவேன். ஓபிஎஸ் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். இதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் இனியும் நம்ப மாட்டார்கள் என்று கூறினார்.