சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மினிகாய் தீவு அருகே நிலைகொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறி ஓமன் கரையை நோக்கி நகரும் என்றும் வடஅந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலாக உருபெற்று ஒடிசா கரையை நோக்கி நகரும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.
வரும் 12ஆம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கும், அந்தமான் கடலுக்கும் நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 48 விசை படகுகள் இன்னும் கரை திரும்பாத நிலையில் அவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை மற்றும் விமானப்படை மூலம் புயல் குறித்த எச்சரிக்கை அளிக்கும் வீடியோ மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 646 விசை படகுகளில் சுமார் 80 சதவீத படகுகள் கரை திரும்பி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.