சென்னை: ஆளுநரைப் பற்றி ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதால் கோபால் கைது செய்யப்பட்டு உள்ளார். முன்னர் தன்னைப் பற்றியும் அவதூறாகப் பேசியதால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளேன் என்று அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
124 A பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, எழுத்தாளர் அருந்ததி ராய் போன்றோர்கள் இந்த பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நக்கீரன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டுள்ள எழும்பூர் நீதிமன்றத்துக்கு இந்து பத்திரிகையின் என்.ராம் வந்திருந்தார்.
நக்கீரன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டுள்ள எழும்பூர் நீதிமன்றத்துக்கு திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் வந்தனர். வைகோவும் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்திருந்தார். ஆனால் அவரை சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலைய போலீஸார் தடுத்து நிறுத்தினர்.