அம்பாசமுத்திரம்: தாமிரபரணியில் புஷ்கர விழா மற்றும், புஷ்கரத்தை ஒட்டிய துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தாமிரபரணியின் முதல் படித்துறையில், தாமிரபரணி புஷ்கர விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு, அகில பாரத துறவிகள் மாநாட்டினை சங்கு முழங்க அகிலானந்தா மகரிஷி கொடியேற்றியும் அகல விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இன்று மகா பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் துறவிகள் நீராடி பகவானை தரிசித்து வருகின்றனர். மேலும் இந்த மகா புஷ்கர நிகழ்விற்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை சுமார் 9 மணி அளவில் அகில பாரத துறவிகள் மாநாடு தொடங்கப்பட்டது. அகில் அகிலானந்த மகரிஷி கொடி ஏற்றியும், அகல் விளக்கு ஏற்றியும் இந்த விழாவை தொடங்கி வைத்தார்
இப்பகுதியில் தற்போது பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த மகா புஷ்கரம் விழாவானது இன்று தொடங்கி வருகின்ற 22 10 2018 வரை தொடர்ந்து நடைபெற இருப்பதால் பக்தர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒவ்வொரு நாளும் அகில பாரத துறவிகள் மாநாடு சார்பாக மாபெரும் அன்னதானம் மற்றும் ஒவ்வொரு நாளும் இசை நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது
இன்று மாலை 6 மணிக்கு மேல் தாமிரபரணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தீப விளக்கு காட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று முற்பகல், தமிழக ஆளுநர் வந்திருந்து, புஷ்கர விழாவை தொடக்கிவைக்கிறார்.