தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே ஓடி குறிப்பாக ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தினுள்ளேயே ஓடி வளப்படுத்தி கடலில் கலக்கக் கூடிய தமிழகத்தின் வற்றாத ஒரே ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டு களுக்கு பிறகு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆம் தாமிரபரணி மஹா புஷ்கரம்.
இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் 2 கோடி பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் நீராட இருக்கிறார்கள். இத்தனை பக்தர்களும் நீராடும் வகையில் ஆங்காங்கே பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாகவும். ஊர்மக்கள் சார்பாகவும், கோவில் விழா கமிட்டியினர் சார்பாகவும் தாமிரபரணி நதிக்கரை முழுவதும் ஏற்கனவே இருந்த படித்துறைகளை சீரமைத்தும், புதிதாக பல இடங்களில் படித்துறைகளை உருவாக்கியும் வருகிறார்கள்.
தற்போது நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. இங்கே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் நீராட வேண்டும் என்று கட்டாயமில்லை! தாமிரபரணி நதியில் எங்கு வேண்டுமானாலும் நீராடலாம்.
எனவே ஒரே இடத்தில் ஒரே படித்துறையில் ஒட்டு மொத்த மக்களையும் சேர்க்காமல், 140 சொச்சம் படித்துறைகளுக்கும் மக்களை பிரித்து அனுப்பி வைத்து, ஒரே படித்துறையில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆன்மிக அமைப்புகளுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.