சென்னை: தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் நக்கீரன் இதழின் மூலம் மஞ்சள் பத்திரிகைத் தன்மையில் செய்திகள் வெளியிடப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.
மேலும், பன்வாரிலால் புரோஹித்துக்கும் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்றும், கடந்த ஓராண்டு காலத்தில் பேராசிரியை நிர்மலா தேவி ஒரு போதும் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்ததே இல்லை என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அண்மைக் காலமாக ஆளுநர் மாளிகை குறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக., தனது கட்சி சார்பு ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்பி வருவது தமிழக மக்கள் நன்றாக அறிந்ததுதான்! ஆளுநர் ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பு தெரிவிப்பதும், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினே இதற்கு முன் நின்று கோஷம் போடுவதும் தமிழக மக்களிடம் மிகவும் அநாகரிகமான செயல்கள் என மனத்தில் இப்போது பதிந்துள்ளது.
மேலும், திமுக., தனது சார்பு ஊடகங்கள் மூலம், ஆளுநரைக் குறித்த அவதூறுகளையும் கிளப்பி வருகிறது. குறிப்பாக சன் டிவி., கலைஞர் டிவி., தினகரன், நக்கீரன் உள்ளிட்ட காட்சி, அச்சு ஊடகங்கள் மூலம், நேர்மையாளர்களை குறிவைத்து ஊழல்களுக்குத் துணைபோகும் விதத்தில் அவதூறுப் பிரசாரத்தைச் செய்து வருவதுடன், அதற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீதிமன்றத்தையும் அடிபணிய வைத்துள்ளது. இதற்கு, திமுக., தனது பினாமி பத்திரிகையான ‘தி ஹிந்து’ இதழ் மூலம் காரியத்தை நகர்த்திக் கொண்டுள்ளது.
ஆளுநர் மாளிகை குறித்து பெண்களை மையமாக வைத்து மஞ்சள் பத்திரிகை என்று தமிழக வாசகர்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ள நக்கீரனில் எழுதப் பட்டு வரும் அவதூறுகளைச் சுட்டிக் காட்டி, ஆளுநர் மாளிகையில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு பரப்புவது தங்களது கருத்துச் சுதந்திரம் என்று பத்திரிகை சுதந்திரத்தைச் சுட்டிக்காட்டி, தி ஹிந்து நாளிதழ் ஆசிரியர் குறுக்கிட்டதை அடுத்து, அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நக்கீரன் கோபாலை விடுவித்தது.
இதை அடுத்து, நக்கீரனில் வெளியான கட்டுரை குறித்து ஆளுநர் மாளிகை விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப் பட்டுள்ளதாவது: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனோ ஆளுநர் மாளிகையுடனோ அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை தொடர்புடுத்துவது முற்றிலும் தவறானது! அதில் ஒரு துளியும் உண்மையில்லை!
மாநிலத்தின் முதல் குடிமகனான ஆளுநரை அவதூறாகவும் அசிங்கமாகவும் கோழைத்தனமாகவும் குறிப்பிட்டுத் தாக்குவதை நிறுத்துவதற்காக, வெகு காலம் பொறுமை காத்து, பின்னரே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டது. இவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையை பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என கூறுவது நகைப்புக்கு இடமானது.
எதற்கும் ஓர் எல்லை உண்டு என்கிற நிலையில், மிகவும் கண்ணியமாக 6 மாத காலம் பொறுமை காத்த பிறகே, சட்டம் அதன் பணியைச் செய்யும் என்ற வகையில், நீதிமன்றத்தின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் நக்கீரன் இதழில் வெளியான அந்தக் கட்டுரை, மஞ்சள் இதழியல் தன்மையில் அமைந்திருந்தது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. புலனாய்வு இதழியலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறிக்கொள்பவர்கள், போலீசாரிடம் நிர்மலா தேவி உண்மையிலேயே கூறியது என்ன என்பதை சரிபார்த்திருக்க வேண்டும் என்பதைப் பற்றிக்கூட அக்கறைப் படவில்லை.
இந்தக் கட்டுரை வெளியிடப் பட்டது, இதழியலில் அலட்சியம் மற்றும் கோழைத் தனத்தின் உச்சம். உண்மை என்னவெனில் கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை! ஆளுநருடனோ அவரது செயலருடனோ அல்லது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளுடனோ நிர்மலா தேவிக்கு எந்த தொடர்பும் இல்லை!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அன்னை தெரசா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்காக அழைக்கப்பட்டபோது, ஆளுநர் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்திற்கு ஒருபோதும் செல்லவில்லை! விருந்தினர் இல்லத்தில் தங்கவுமில்லை!
மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநருடன் ஒருபோதும் அவரது செயலர் சென்றதில்லை!
உண்மைக்கும், நலனுக்கும் எதிராக ஆழமான வெறுப்பு கொண்டவர்களால் மட்டுமே, நக்கீரன் இதழில் வெளியானது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்! இத்தகைய தவறான, மஞ்சள் இதழியலுக்கு மதிப்புக்குரிய நபர்களும் ஆதரவளிப்பது வருத்தத்திற்கு உரியது!
அரசின் அதிகாரத்தை மிதமிஞ்சிப் பயன்படுத்துவதற்கு அணுக்கமான செயலைக்கூட ஆளுநர் மாளிகை செய்ததோ ஆதரித்ததோ இல்லை! தொடர்ச்சியாக காயப்படுத்தும் வகையில் அடிப்படையற்ற அவதூறுகளை செய்ததால் சட்ட அடிப்படையில் புகார் கொடுக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற ஆளுநரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது! ஆளுநர் பதவியின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களுக்கு ஆளுநர் மாளிகை ஒருபோதும் அடிபணியாது.
சமூக விரோத சக்திகள் எந்த எல்லையை நோக்கியும் சமூகத்தை கொண்டு செல்லக் கூடும் என்ற அச்சத்தினாலேயே ஆளுநர் மாளிகை உண்மையை விளக்க வேண்டியதாயிற்று என்று அந்த விளக்கக் குறிப்பில் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.