தன் மீது பாலியல் குற்றம் சுமத்தி, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா மணிமேகலை என்று புகார் கூறியுள்ளார் இயக்குனர் சுசி கணேசன்.
இயக்குநர் சுசி கணேசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியபோது இவ்வாறு குற்றம் சாட்டினார்.
#மீடூ புகார் தொடர்பாக எழுத்தாளர் மற்றும் இயக்குனருமான லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்தார். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுசி கணேசன் புகார் தொடர்பாக விளக்கமளித்தார்.
லீனா மணிமேகலை இதுபோன்ற புகார்கள் மூலம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர் லீனா மணிமேகலை மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வதாகவும், திட்டமிட்டு தனது பெயருக்கு களங்கம் எற்ப்படுத்தி பிரபலம் அடைய முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் 14 ஆண்டுகள் ஏன் இது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறினார்.