சென்னை: கோடம்பாக்கத்தில் மீடு விவகாரத்தில் ஏன் முக்கியத் தலைகள் மௌனம் சாதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார், இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை.
பணியிடங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள்” தொடர்பான அனுபவங்களை ஏராளமான பெண்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய #metoo இயக்கம் இந்தியாவிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதைக் குறித்த எதிர்வினைகளுக்கு, பல ஊடக நண்பர்கள் என் பதிலை எதிர்பார்ப்பதால், அனைவரையும் சந்திக்கிறேன் என்று குறிப்பிட்ட லீனா, இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி ஏன் தாமதம்? உடனே சொல்லியிருக்கலாமே என்பதுதான்.
பத்திரிகையாளர்கள் ஒருவர் விடாமல் கேட்கும் கேள்வி; ஏன் தாமதம். ஏன் குற்றம் நடந்தவுடன் முறையிடவில்லை?
அடுத்து, ஏன் கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் மெளனம் சாதிக்கிறார்கள்? மெளனம் சாதிக்கிறவர்கள் குற்றத்திற்கு துணை போகிறவர்கள். குற்றவாளிகளை விட மோசம் அவர்கள். இன்னும் சரியாக சொன்னால், மெளனம் சாதிக்கிறவர்களை நான் வெகுவாக சந்தேகிக்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது இவ்வளவு படைப்பு வேலைகள் செய்து ஒரு ஆளாகி நிற்கும்போதே இவ்வளவு பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே! அப்போதே சொல்லியிருந்தால் என்ன குற்றவாளியை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பி என்னை பாதுகாத்திருப்பீர்களா? என்ற கேள்வியை முன்வைக்கிறார் லீனா மணிமேகலை!
முறையிடும் பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை என உங்களிடமே அந்தக் கேள்வியை திருப்புங்கள்! முறையிடும் பெண்ணை ஏன் களங்கப் படுத்துகிறீர்கள் என சமூகத்திடம் கேளுங்கள்! ஏன் இந்தக் குற்றங்கள் நடக்கிறது என அதிகாரத்திடம் கேளுங்கள். முறையிடுவதில் ஏற்படும் தாமதங்களுக்கு பாதிக்கபட்ட பெண் மட்டுமே பொறுப்பாக முடியாது. #metoo என்று பதில் கூறும் லீனா மணிமேகலை, முன்னதாக இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் அத்துமீற முயன்றார் என்றும், தன் கையில் கத்தி வைத்திருந்ததால் தாம் தப்பித்ததாகவும் கூறியிருந்தார். அதை அடுத்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.