1620ம் ஆண்டு தெலுங்கு ப்ராமண குடும்பத்தை சேர்ந்த திரு லிங்கண்ணா மந்திரி மற்றும் திருமதி காமாம்பா அம்மையாருக்கும் மகனாக திரு கஞ்சர்ல கோபண்ணா @ கோபராஜு என்பவர் இப்போதைய தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள நிலகொண்டப்பள்ளி என்னும் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார்.

ப்ராமண குலத்தில் பிறந்த அவர் ராமர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டு இருந்தார். இளம் வயதில் கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்று, ராமர் மேல் பல கீர்த்தனைகள் இயற்றி அதனை பாடவும் செய்தார். அதனால் அவரை வாக்கேயகாரர் (வாக் – சொல், வார்த்தை, வாக்கியம் என்று பொருள், கேயம் என்றால் பாடல் பாடுவது என்று பொருள்) தானே பாடல் புனைந்து, அதற்கு தகுந்த ராகங்களை தெரிவு செய்து, அதனை பாடலாக பாடுவதால் இவரை வாக்கேயக்காரர் என்று அழைத்தார்கள்.

அப்போது ஐதராபாத்தை ஆண்ட குதுப் ஷாஹி வம்சத்தை சார்ந்த நவாப் அப்துல்லா குதுப் ஷா இவரை தனது எல்லைக்குட்பட்ட, அப்போதைய வாரங்கல் மாகாணத்தில் இருந்த பத்ராச்சலம் பகுதியின் தாசில்தாராக நியமித்தார்.

அவர் பத்ராச்சலம் ஊருக்கு போகும்போதெல்லாம், கோதாவரி நதி கரையை பார்க்கும் போதெல்லாம், அங்கு க்ஷிதிலமடைந்த நிலையில் உள்ள வைகுண்ட ராமர் ஆலயத்தை பார்த்து, அதை புதுப்பித்து கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், எப்படி புதுப்பிப்பது, அதற்கு தேவையான பொருளாதாரம் பற்றி எல்லாம் யோசித்து அவர் மனது சஞ்சலத்தில் ஆழ்ந்து விடும். அந்த எண்ணம் அவரை தூங்க விடாமல் தவிக்க வைத்தது. அப்போது அவர் ஒரு முடிவு எடுத்தார். நாட்டுக்கு வரி வசூல் செய்யும்போது கோவிலை புதுப்பிக்கும் திருப்பணிக்கும் கூட மக்களிடம் கேட்டு அதற்கென தனியாக வசூல் செய்வது என்னும் திட்டம்.

தனது தாசில்தார் பதவி கொடுத்த தெம்பு ஒன்றையே பயன்படுத்தி, மக்களிடம் கோவில் கட்ட ஆசைப்படுவதாகவும் அதற்கு அவர்களால் இயன்ற பொருளுதவி தருமாறு கூறி, அவ்வாறே வசூல் செய்து கோவில் கட்ட ஆரம்பித்தார். ஆனால் அவரால் மக்களிடம் இருந்து கோவிலுக்கு என வசூலித்த பணத்தில் அவர் மனம் விரும்பிய வைகுண்ட ராமர் கோவிலை கட்ட முடியவில்லை.

அவர், தன்னை நவாபின் அரசில் தாசில்தாராக பணியமர்த்திய, தனது மாமா ஐதராபாத் நவாபிடம் பணியாற்றுவதால், அவரிடம் இருந்து வரி வசூல் செய்த பணத்தை கடனாக பெற்று, தன்னுடைய நீண்ட நாள் கணவனை வைகுண்ட ராமருக்கு ஒரு கோவில் கட்டினார்.

கோவில் கட்டிமுடிக்கும் தருணம், கோவிலின் மேல் ஒரு சுதர்சண சக்ரம் பிரதிஷ்டை செய்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தார். அன்று இரவு கனவில் ராமர் தோன்றி அதிகாலை வேளையில் கோதாவரி நதியில் ஸ்னானம் செய் என்று சொல்லி மறைந்து விட்டார். கனவில் கண்டபடியே ராமரின் கட்டளைப்படி கோதாவரி நதியில் ஸ்னானம் செய்து எழும்போது அவருக்கு கையில் ஒரு சுதர்ஷண சக்ரம் கிடைத்தது. அதையே நாம் கோவில் கோபுரத்தில் காணலாம்.

அவர் கோவில் கட்டுவதை பார்த்த பத்ராச்சலத்தில் உள்ள நவாபின் சொந்தக்காரர்கள் சிலர், இவர் மக்களிடம் வரி வசூலித்து நவாபுக்கும், தில்லியில் உள்ள பாதுஷா ஷாஜஹானுக்கும் செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்தாமல், வரிப்பணத்தை வைத்து பத்ராச்சலத்தில் ராமருக்கு கோவில் கட்டுகிறார் என்று அப்துல்லா குதுப் ஷாவுக்கு செய்தி அனுப்பினார்கள்.

அந்த செய்தியை பார்த்த அப்துல்லா குதுப் ஷா, பத்ராச்சலத்தில் இருந்து தாசில்தார் கோபன்னாவை கைது செய்து அழைத்து வருமாறு ஆணையிடுகிறார். அதன்படி வீரர்கள் கோபன்னாவை கைது செய்து ஐதராபாத்தில் உள்ள நவாப் அப்துல்லா குதுப் ஷாவிடம் அழைத்து சென்று விசாரணை செய்தார்.

திரு கோபண்ணா நான் வரி பணத்தை திருடவில்லை. எனது மாமாவிடம் கடனாக வாங்கி அந்த பணத்தில்தான் கோவில் கட்டினேன் என்று எடுத்து சொல்லியும் நவாப் இவருடைய பேச்சை கேட்காமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நவாபின் ஆணைப்படி அவரை கோல்கொண்டா கோட்டையில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். அவருக்கு ஒரு சிறு துவாரத்தின் வழியாக தண்ணீர் & உணவு வழங்கி, யாரும் போக/பார்க்க/பேச முடியாதவாறு தனிமை சிறையில் 12 ஆண்டுகள் வைத்து இருந்தார்.

சிறையில் இருந்த 12 ஆண்டுகளும் ராமரையும் சீதையும் நினைத்து பூஜித்தார். இப்போதும் நாம் பக்த ராமதாஸ் கைது செய்து சிறை வைத்த இடமான கோல்கொண்டா கோட்டையில், பக்த ராமதாஸ் தனது வழிபாட்டுக்கென வரைந்த (தற்போது பாழடைந்த நிலையில் உள்ள) ராமா சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய உருவங்களை பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அவர் சிறைவாசம் அனுபவித்த நிலையில் ஒரு நாள் மிகவும் அழகாக இரண்டு இளைஞர்கள் அப்போது ஐதராபாத் சுல்தானேட்டில் ஆட்சியில் இருந்த நவாப் அபுல் ஹசன் குதுப் ஷாவிடம் நடு இரவில் அவருடைய படுக்கை அறைக்கு வந்து அவர்கள் வட நாட்டில் இருந்து வருவதாகவும், அவர்கள் பெயர் ராம் சிங் மற்றும் லக்ஷ்மண் சிங் என்றும் அறிமுக படுத்தி கொண்டு, நவாபிடம் தாசில்தாராக பணியாற்றிய திரு கோபண்ணா, அவர்களுக்கு ஒரு வீடு கட்ட உங்களிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வந்திருக்கிறோம். அவர் வரி பணத்தில் இருந்து 6 லக்ஷம் வெள்ளி காசுகள் கடனாக பெற்றார்.

உங்களிடம் வாங்கிய அந்த 6 லக்ஷம் வெள்ளி காசுகளுக்கு பதிலாக 6 லக்ஷம் தங்க காசுகளை திரும்ப செலுத்துகிறோம். அவரை விடுதலை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டனர்.

உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த நவாப் அபுல் ஹசன் குதுப் ஷாவுக்கு, அங்கு யாரையும் காணவில்லை, காவலாளிகளிடம் கேட்டால் அப்படி யாரும் வரவில்லை என்றார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த தங்க காசுகள் பளபளப்புடன் அங்கே இருந்தது. அந்த காசுகளில் ராமர் லக்ஷ்மணர் சீதா உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பக்கமும், மறுபக்கம் ஆஞ்சநேயர் உருவம் பொறிக்கப்பட்டதுமாக 6 லக்ஷம் காசுகள் இருந்தன.

அப்போதுதான் அவர் தவறு செய்துவிட்டோமே என்று மனதில் நினைத்தார். அதற்கு ஒரு அசரீரி கோபண்ணா முற்பிறவியில் செய்த தவருக்குத்தான் இப்போது தண்டனை அனுபவிக்கிறார். அவரை உடனே விடுதலை செய். என்று உத்தரவு வருகிறது.

அப்போதே கோல்கொண்டா கோட்டைக்கு சென்று கோபன்னாவிடம் நடந்த நிகழ்வுகளை சொல்லி மன்னிப்பு கேட்கிறார். பத்ராசலம் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை அவருக்கு வழங்கி இனி தாசில்தார் பணி செய்ய அவசியம் இல்லை என்றும் அவர் விருப்பம் போல ராமருக்கு சேவை செய்து வாழலாம் என்று கூறி விடுதலை செய்தார் .

பத்ராச்சல ராமதாசு என்று அனைவரும் அவரை அழைக்க தொடங்கினர்.

பக்த ராமதாஸ் அவர்கள் 108க்கும் அதிகமான கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் பல இயற்றினார். தாசரதிசதகம், தாசரதிகருணா பாயோநிதி மற்றும் மகுடமு ஆகியவை அவரது கிருதிகள் ஆகும். 1680ல் அவரது 60வது வயதில் அவர் முக்தி அடைந்தார்.

Bhaskar S

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.