தாமிரபரணி புஷ்கரம் இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லாமல்… நல்ல முறையில் செல்கிறது. புஷ்கரம் நிறைவடைய இன்னும் இரு நாட்கள்தான் உள்ளன.
பாபநாசத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை 9 லட்சம் பேர் குளித்ததாக போலீஸார் கணக்கு கூறினர். அனேகமாக ஒரு லட்சம் பேர் ஒரு நாளுக்கு என்ற சராசரியில் புனித நீராடி வருகின்றனர் பாபநாசத்தில்.
தாமிரபரணியில் சுமார் 143 படித்துறைகள் உள்ளன என்பதால், பரவலாக அனைத்து படித்துறைகளிலுமே பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். எனவே, எல்லா இடங்களிலுமே லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். படித்துறைகளில் நல்ல கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, வட மாநில மக்களின் ஆர்வமும் கூட்டமும் மிக அதிகம்.
வரும் மக்களுக்கு நெல்லைவாசிகள் நன்கு வழி காட்டுகிறார்கள். தாமாக முன்வந்து உதவுகிறார்கள்… நெல்லை மக்களின் பாச மழையில் நனைந்த மற்ற ஊர் மக்கள் பெருமிதத்துடன் சொல்வதைக் காதில் கேட்ட முடிகிறது.
அரசுத் தரப்பில் இந்த விழா நடத்தப் படவில்லை, அறநிலையத்துறை பாராமுகத்துடன் கோட்டை விட்டது. மாவட்ட நிர்வாகம் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால்…. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப் பட்டுள்ளன. போலீஸார் முக்கிய தீர்த்தக் கட்டங்களில் சிறப்பாக பணி செய்கின்றனர். இருப்பினும், மிகப் பெரிய படித்துறையில் கூட, நீராடுவதற்கு என்று குறுகிய இடத்தை அமைத்துக் கொடுத்து, போலீஸார் நெருக்கடி காட்டுவது பலரிடம் முகத்தை சுளிக்க வைத்துள்ளது. நீராடுவதற்கு வரிசை கட்டி கம்புத் தட்டிகளுக்குள் அடைபட்டிருப்பதை நெல்லையில் குறுக்குத்துறை, தைப்பூச மண்டப படித்துறையில் மக்கள் விமர்சித்துச் செல்கின்றனர்.
அரசுத் தரப்பிலான ஏற்பாடுகள் இல்லாவிட்டாலும், தனிநபர்கள், மடாதிபதிகள், இந்து இயக்கங்களின் தொண்டர்களால் தாமிரபரணி மகாபுஷ்கரம் வரலாற்றில் பேசப்படும் அளவுக்கு சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக மாலை நேரங்களில் நடைபெறும் ஆரத்தி வழிபாட்டை பொதுமக்கள் பெரிய அளவில் திரண்டு, பார்த்து மகிழ்கின்றனர். உடன் சிலரும் பாடல்களைப் பாடியும் மகிழ்கின்றனர்.
தாமிரபரணி நதியும் இந்த பத்து நாட்களில் அமைதியாக, எந்த ஆக்ரோஷமும் இன்றி… பாபநாசம் தொடங்கி ஸ்ரீவை., வரைக்கும் இயல்பாகவே ஓடிவருகிறாள். பெரு மழை இல்லாததால்… வெள்ளம் இல்லை. எனவே நம் மாநிலத்தின் ஒரே வற்றாத ஜீவநதியான பரணித் தாய், தன்னை நோக்கி வந்தவர்களை அரவணைத்துக் காத்திருக்கிறாள்…
ஞாயிறு இன்று… பாபநாசம் தாமிரபரணி புஷ்கர விழாவில் புனித நீராட வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இதனிடையே, இன்று போடியைச் சேர்ந்தவர்களில் சிலர் ஆற்றில் நீராடியபோது, ஆற்றில் மூழ்கிய 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
படித்துறைகளில் வலை போடப்பட்டு, மணல் மூட்டைகள் ஆங்காங்கே படிகளாய் அமைக்கப் பட்டுள்ளன. பாபநாசத்திலும், தைப்பூச மண்டபம் உள்ளிட்ட இன்னும் சில படித்துறைகளில் பாறைகள் அதிகம். எனவே மற்ற ஆறுகளைப் போல் நினைத்துக் கொண்டு… காவல்துறையினர் அனுமதித்துள்ள இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் அசால்ட்டாக இறங்கி யாரும் நீராட முற்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள் காவல்துறையினர்!
வீடியோ… பாபநாசம் படித்துறையில் புனித நீராடக் குவிந்த மக்கள்…