செங்கோட்டை: நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இசக்கி ரிஸார்ட்ஸில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம் எல். ஏ.,க்களில் சாத்தூர் சுப்பிரமணியன், ஆண்டிப்பட்டி தொகுதி தங்க தமிழ் செல்வன், பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், பெரியகுளம் கதிர்காமு ,மாரியப்பன், கென்னடி, சுந்தர ராஜ், உள்ளிட்டவர்கள் நேற்று வந்திருந்தனர்.
தற்போது வரை 20 எம்எல்ஏக்கள் குற்றாலத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாபநாசம் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துகொண்டு குற்றாலத்தில் இன்னும் இரண்டு நாட்கள் அவர்கள் தங்க உள்ளதாகக் கூறிய தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவுக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
மேலும், தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் குறித்த தீர்ப்பு வந்த பின்னர் தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், தமிழக மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய மாற்றம் வருமென தங்க தமிழ்செல்வன் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
முன்னதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாங்கள் குற்றாலம் செல்வதாக முடிவு எடுத்து இருப்பது உண்மை தான். ஆனால், யாருக்கும் பயந்து அங்கு செல்லவில்லை. நாளை மகா புஷ்கரம் நிறைவடைய உள்ள நிலையில், நெல்லைக்கு புனித நீராடவே செல்கிறோம்.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என ஓ.பி.எஸ் புனித நீராடியது போன்று, தீர்ப்பு எங்கள் பக்கம் வர வேண்டும் என நாங்கள் புனித நீராட செல்கிறோம். இந்த ஐடியாவை கொடுத்ததே நான் தான். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர் என்று தெரிவித்திருந்தார்.