திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா இன்று இனிதே நிறைவடைந்தது.
குரு பகவான் விருச்சிக ராசிக்குப் பெயர்வதை முன்னிட்டு, விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணியில், குரு பெயர்ச்சி ஆன நாளில் இருந்து 12 நாட்களுக்கு இந்த மகா புஷ்கர விழா கொண்டாடப் பட்டது. பாரத நாட்டின் புனித நதிகளான 12ல் தாமிரபரணி விருச்சிக ராசிக்குரிய நதியாக புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணியில் புஷ்கர விழாவாகவும், 12 முறைகளுக்கு ஒருமுறை, அதாவது 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கர விழாவாகவும் அமைந்ததால், இது மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
இதன் அடிப்படையில், கடந்த 11ஆம் தேதி துவங்கிய மகாபுஷ்கர விழா அக்.23 இன்று இரவு நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று பாபநாசம் துவங்கி அடுத்தடுத்துள்ள தீர்த்தக் கட்டங்களான வீரவநல்லூர், அத்தாளநல்லூர், திருப்புடைமருதுார், நெல்லை தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை, மணிமூர்த்தீஸ்வரம், செப்பறை கோயில் படித்துறை, தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, அகரம், ஸ்ரீவைகுண்டம் என பல்வேறு தீர்த்தக்கட்டங்களிலும் மக்கள் அதிக அளவில் குவிந்து, புனித நீராடினர்.
புஷ்கரத்தின் நிறைவு நாளில் நெல்லை ஜங்ஷன் தைப்பூச மண்டபத்தில் நடந்த நிறைவுநாள் ஆரத்தி விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிய சத்யஞான சுவாமிகள், சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகள், விஎச்பி மூத்த தலைவர் வேதாந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, நெல்லை மாவட்டத்தில் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சியராக இருந்த போது, புஷ்கர விழா நடத்தப் படுவதன் முன்னோட்டமாக ஆலோசனைக் கூட்டம் போட்டு, கருத்துகளைக் கேட்டு அரசு விழாவாக நடத்துவதற்கு முன் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆனால், தூத்துக்குடி கலவரத்தை அடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி தூத்துக்குடிக்கு மாற்றலாகிச் சென்றார். நெல்லை ஆட்சியராக ஷில்பா சதீஷ் பொறுப்புக்கு வந்தார். அந்த நேரம் அவரிடம், திமுக., கிறிஸ்துவ இயக்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும், இந்து மத விழாவுக்கு அரசு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், இந்து மத விழாவை மாவட்ட நிர்வாகம் அங்கிகாரம் கொடுத்து நடத்தக் கூடாது என்றும் நெருக்கடி கொடுத்தன. இதனால் திடீரென அச்சப்பட்டு அவர்களுக்கு அடிபணிந்து பின்வாங்கினார் ஆட்சியர்.
இதை அடுத்து, திருநெல்வேலி தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை ஆகிய இடங்களில் புஷ்கர விழா நடத்த அனுமதி மறுத்தார். இதற்கு பல காரணங்கள் சொல்லப் பட்டன. அரசும், அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகத்தின் கருத்தை எதிரொலித்தன. இதை அடுத்து, அனுமதி மறுக்கப்பட்ட இரு படித்துறைகளிலும் புஷ்கர விழாவை நடத்த உத்தரவிடக்கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
இதன் பின்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில், வேண்டா வெறுப்பாக மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்க, இந்த இரு படித்துறைகளிலும் புஷ்கர விழா சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, தமிழக ஆளுநரே பாபநாசம் படித்துறைக்கு நேரில் வந்து கலந்து கொண்டு புனித நீராடி புஷ்கரத்தை தொடங்கி வைத்தார். அரசுத் தரப்பில் எந்த நகர்த்தல்களும் இல்லை. ஆதரவும் இல்லை. தொடர்ந்து, சிவ மடங்கள், ஆதீனங்கள், இந்து இயக்கங்கள், தனி நபர்கள், இந்து இயக்கங்களின் தொண்டர்கள் என பலரும் இணைந்து, படித்துறைகளை சீராக்கி, தூய்மைப் படுத்தி, புஷ்கர விழாவை வெகு சிறப்பாக, எந்த அசம்பாவிதமும் இன்றி நடத்திக் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ்., பாபநாசம் வந்து நீராடினார். தொடர்ந்து, புஷ்கர விழா நடந்த 12 தினங்களில் அமைச்சர்கள் எங்கும் கலந்து கொள்ளாத நிலையில், இன்று நிறைவு நாள் விழாவில் அரசு முன்பு அனுமதி மறுத்த அதே படித்துறையிலேயே அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு புனித நீராடினர்.
தினந்தோறும் அனைத்து தீர்த்தக் கட்டங்களிலும் மாலை வேளையில் ஆரத்தி நடைபெற்றது. அதைக் காண்பதற்கென்றே மக்கள் பெருந்திரளாக நதிக் கரையில் கூடினர். நிறைவு நாளான இன்று, தாமிரபரணிக்கு மகாஆரத்தி வைபவம் நடைபெற்றது. இதற்காக, தைப்பூச மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து பாடல்களைப் பாடி, நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
இந்த 12 தினங்களிலும் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 1 கோடி பேர் புனித நீராடியிருக்கலாம் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.