சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு லாப – நட்டத்தை குறியீடாக கொண்டு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டிருக்கிறேன் . லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்!.
நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்!
லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸும், பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுவோருக்கு 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப் போல, இந்த ஆண்டும் 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்!
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஆகியனவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 10 முதல் 20 விழுக்காடு வரையில் போனஸ் வழங்கப்படும்!
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகியனவற்றில், பணிபுரியும் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3,58,330 தொழிலாளர்களுக்கு ரூ. 486 கோடியே 92 லட்சம் போனஸாக வழங்கப்படும்!